பாஸ்போர்ட்&விசா


1-ந் தேதி முதல் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. சாதாரண பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1,500 ஆகவும், தட்கல் கட்டணம் ரூ.3,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு
தற்போது சாதாரண முறையிலான பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்ப கட்டணமாக ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1,000-ம், `தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் கட்டணமாக விண்ணப்பத்திற்கு ரூ.2,500-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது கடந்த 2002-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் வெளிவிவகார துறை பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தி அறிவித்து உள்ளது.
1-ந் தேதி முதல்
இதன்படி வருகிற அக்டோபர் 1-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணமாக ரூ.1,500-ம், தட்கல் பாஸ்போர்ட் கட்டணமாக ரூ.3,500-ம் செலுத்த வேண்டும்.
பாஸ்போர்ட் புத்தகங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் செலவு, போஸ்டல் செலவு, பிரிண்டிங் செலவுகள் உள்பட செலவினங்கள் அதிகமாக ஆவதாலும், போலீஸ் விசாரணை கட்டணம் மற்றும் பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கான செலவினங்களினாலும் இந்த கட்டண உயர்வு செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 75 யு.எஸ் டாலரும், யூரோ 60-ம் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.